• Tue. Oct 3rd, 2023

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Nov 7, 2021

ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான். மருத்துவர் அந்தக் குதிரையின் நிலையை பார்த்து, நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய மருந்தை கொடுத்துச் சென்றார்.


இவர்களது உரையாடலை ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த குதிரையிடம் வந்து, “எழுந்து நட நண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்” என்று அந்தக் குதிரையை ஊக்குவித்தது.


மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து கொடுத்துவிட்டு, அந்த விவசாயிடம் “நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்.” என்று சொல்லிச் சென்றார்.
அந்த மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.


எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது, குதிரை ஓடியதைப் பார்த்து சந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம் “என்ன ஒரு ஆச்சரியம். என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம் உங்களுக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!” என்று சொன்னார்”


“பார்த்தீர்களா! இந்தக் கதையில் உண்மையில் குதிரை குணமடைந்ததற்கு அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை குணமடைந்தது என்று எண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க நினைக்கிறார்கள்.


இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட, அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *