• Wed. Dec 11th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 11, 2023

சிந்தனைத்துளிகள்

மிருககாட்சி சாலையில் ஒரு ஒட்டகக்குட்டி தன் தாயிடம் கேட்டது, “அம்மா, எனக்கு ஒரு சந்தேகம். நமக்கு ஏன் திமில்கள் பெரிதாக இருக்கின்றன?”

தாய் ஒட்டகம் சொன்னது,
“மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடுந்தொலைவு நடக்க நீர் பற்றாக்குறையாகப் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும் பையாக செயல்படுகிறது.”
ஒட்டகக்குட்டி மேலும் கேட்டது,
“அம்மா, நமக்கு ஏன் கால்கள் இவ்வளவு நீண்டவையாகவும், மொழுக்கென்றும் உள்ளன?”
தாய் சொன்னது,
“மகனே, நாம் பாலைவனத்தில் நீண்ட தூரம் நடக்கவேண்டுமல்லவா? மணலில் நடக்க ஏதுவாக நமது கால்கள் அப்படி அமைந்துள்ளன”
ஒட்டகக்குட்டி மீண்டும்,
“அம்மா, நமது கண் பீலிகள் ஏன் இவ்வளவு பெரிதாக இருக்கின்றன? சில நேரம் எனது பார்வையை மறைக்கிறது” தாய் சொன்னது,
“நாம் பாலைவனத்தில் நடக்கும்போது, வெப்பக்காற்றிலும், மணற்புழுதியிலும் நமது விழிகளை பாதுகாக்க இவ்வாறு அமைந்துள்ளது.”
ஒட்டகக்குட்டி மீண்டும் கேட்டது,
“அப்படி என்றால், நாம் பாலைவனத்தில் இல்லாமல், இங்கே மிருக காட்சி சாலையில் என்ன செய்கிறோம்….??!!