• Sat. Apr 20th, 2024

சாத்தூர் அருகே, தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

ByKalamegam Viswanathan

Feb 17, 2023

சாத்தூர் அருகே, தொழில் பூங்கா அமைப்பதற்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இ.குமாரலிங்கபுரம் பகுதியில், சிப்காட் தொழற்பூங்கா அமைப்பதற்காக பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்பூங்கா அமைப்பதற்காக இது வரையில் சுமார் ஆயிரத்து, 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் உள்ள 580 ஏக்கர் விவசாய விளை நிலங்களையும் கையகப்படுத்துவதற்கான பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் இ.குமாரலிங்கபுரம், கோவில்புலிகுத்தி, மணிப்பாறைப்பட்டி, நடுவப்பட்டி, முத்துலிங்காபுரம் நீர் ஓடைகள் பாதிக்கப்படும். இதனால் இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர்வரத்து பாதிக்கப்பட்டு, கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும் விவசாயமும் பாதிக்கப்படும். எனவே விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். விவசாயத்தையும், விவசாயிகளையும், நீர் நிலைகளையும் அரசு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *