• Fri. Apr 26th, 2024

தனியார் பேருந்துகளின் கட்டணம்
அதிகரிப்பு: ராமதாஸ் கண்டனம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் அதிகரித்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக் கூடாது, தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளை கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னை – மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளை கடுமையாக கண்டிக்கத்தக்கது. பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டன. கட்டணக் கொள்ளை குறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்துத் துறை கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல். ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு மாறாக ஆம்னி பேருந்து சங்கங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள போக்குவரத்துத் துறை அனுமதிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக் கூடாது. ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். அதற்காக சட்டப்பூர்வ ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *