• Thu. Apr 25th, 2024

முகநூல் காதல் ஆபத்து.., ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

Byத.வளவன்

Jan 22, 2022

அந்தக் காலத்தில் காதலுக்கு தூதாக தோழியையும் தாதியையும் அனுப்பினர். இப்போது பேஸ் புக்கில் சேதி அனுப்புகின்றனர். ஆனால், இந்த தூது சிலவேளை நன்மையாக இல்லாமல் தீமையாக அமைந்துவிடுகிறது.
பேஸ்புக் மூலமாக இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய பொறியாளர் சாமுவேலின் வழக்கு முகநூல் காதலின் முகத்திரையை கிழிக்கிறது. சென்னை சிந்தாதரிப்பேட்டையை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒரு பட்டதாரி பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைதானார்.
ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் என பலரை காதல் வலையில் வீழ்த்த முகநூல் உதவுவது அவரது கதையிலிருந்து தெரியவருகிறது. முகநூலில் அதிக பெண் நண்பர்களை கொண்ட சாமுவேல் ‘சாட்டிங்’ மூலம் தன்னை வசதி படைத்தவராக காட்டிக் கொள்வார். அடுத்து, பெண்களை நேரில் சந்தித்து பேசுவார். இறுதியில் அவர்களுடன் செல்ஃபி முதல் செக்ஸ் படங்கள் வரை எடுத்து வைத்துக்கொண்டு சாவதானமாக மிரட்டுவார். இவரால் இதுவரை 11 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காதலில் பொய் சகஜம். ஆனால், காதலே பொய்யாக இருப்பது முகநூலின் அம்சம். அங்கு உண்மைகளை மறைப்பதற்கான சாத்தியம் அதிகம்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வினித் குமார்(24) மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதி கோரியை முகநூல் மூலம் காதலித்துள்ளார். 44 வயதான ஜோதி கோரி தன் வயதை பாதியாக கூறியதை நேரில் அறிந்த வினித் குமார் அவரை சுட்டுக் கொன்றதுடன் தானும் தற்கொலை செய்து கொண்டார். வினித்குமார் உயிரிழப்பதற்கு முன் அளித்த வாக்குமூலத்தில் எனது காதலிக்கு 44 வயது. திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன என்று சந்தித்தபோது தான் தெரிந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஜோதியிடம் அவர் கணவர் அன்பை பொழிந்திருக்கிறார். வினித்குமாரை காதலிக்க ஜோதி பயன்படுத்தியது அவர் கணவர் அன்பளித்த மடிக்கணினி தானாம்.
முகநூல் காதல் மட்டுமல்ல நட்பும் பெரும்பாலும் களங்கம் உடையதாக இருக்க வாய்ப்பு உள்ளது. சேலம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த வினுப்பிரியாவின் படம் முகநூலில் ஆபாசமாக போலிச்சித்தரிப்பு (மார்பிங்) செய்யப்பட்டதற்கு விகல்பமின்றி சுரேஷ் என்ற கொடியவனுடன் முகநூலில் பூண்ட நட்பே காரணமானது. சுரேஷின் வாக்குமூலம் முகநூல் நட்பு எப்படி தீய வழிக்கு இழுத்துச்செல்லும் என்பதற்கு உறுதியான உதாரணமாக உள்ளது. பத்தாம் வகுப்பு படித்துவிட்டு சேலை விற்றுக்கொண்டே தறிப்பட்டறைகளில் மேஸ்திரி வேலையும் செய்து வந்தவனுக்கு வினுப்பிரியா முகநூல் நண்பராகி உள்ளார். அந்த நட்பு இவருக்கு காதலை ஏற்படுத்தியுள்ளது. உடனே வினுப்பிரியாவின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். அவர்கள் மறுத்ததால் வினுப்பிரியாவை பழி வாங்க முடிவு செய்துள்ளான்.
அவர் வீட்டருகே சேலை விற்பனை செய்வது போல் சுற்றிவந்து கைபேசியில் படம் எடுத்துள்ளான். பின்னர் அதை மார்பிங் செய்து ‘மைதிலி வினுப்பிரியா’ என்ற பெயரில் போலி ஐ.டி. உருவாக்கி, படங்களை வெளியிட்டார். விளைவு, ஒரு பாவமும் அறியாத வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார்.
காதலை நோய் என்பார்கள் நமது முன்னோர்கள். முகநூல் காதலும் முற்றிய நோயாகவே இருக்கிறது. நெதர்லாந்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் பீட்டருக்கும்(41) சீனாவைச் சேர்ந்த ஜாங்(26) என்ற பெண்ணுக்கும் முகநூல் காதல். காதலியை நேரில் சந்திக்க முடிவு செய்து சீனாவுக்கு புறப்பட்டார் பீட்டர். இந்த தகவலை நம்பாத ஜாங் அவரை வரவேற்க வரவில்லை. விமான நிலையத்திலேயே பகலிரவாக பத்து நாட்கள் காத்திருந்தும் காதலி வராததால் பீட்டர் உடல்நிலை மோசமானது. விமான நிலைய ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இங்கு காதலியை காண வந்த முகநூல் காதலன் நோய்வாய்ப்பட்டார். இன்னொரு இடத்தில் காதலனை காண வந்த முகநூல் காதலி உயிரையே விட்டாள்.
பிரிட்டனின் செஷிரேவை சேர்ந்த நர்ஸ் அங்கெலா ஸ்லின்(45) 3 குழந்தைகளின் தாய். அவருக்கு இந்தியாவை சேர்ந்த ஜஸ்பால் சிங் மீது முகநூல் காதல் ஏற்பட்டு, தனது கணவர் ஸ்டீபனிடம் கூறாமல் தனது பிள்ளைகளிடம் மட்டும் தெரிவித்துவிட்டு இந்தியா வந்துள்ளார். வந்த இடத்தில் காதல் நோயுடன் நிமோனியாவும் தொற்றிக்கொள்ள, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் அங்கெலா உயிரிழந்தார். நர்சின் ‘அமர‘க் காதல் நோயால் முடிந்தது.
சில முகநூல் காதல்கள் உயிரோடு பணத்தையும் பறிக்கின்றன. மேற்கு ஆஸ்திரேலிய பெர்த் நகரைத் சேர்ந்த பெண், ஆலன் மெக்கர்ட்டி என்பவருடன் பேஸ்புக்கில் நண்பராகி உள்ளார். ஸ்காட்லாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக அந்த ஆலன் மெக்கர்ட்டி பெண்ணிடம் கூறியுள்ளார். காதல் போதை ஏறிய நிலையில், உள் அலங்கார தொழிலில் ஈடுபட்டுள்ள தனக்கு பணம் தேவைப்படுவதாக கூறி தனது பெயருள்ள உள்அலங்கார தொழில் நிறுவன இணைய முகவரியையும் அளித்துள்ளார். இதை நம்பிய அந்தப் பெண் ரூ.1.95 கோடி கொடுத்துள்ளார். பணம் அனுப்பிய பின்புதான், அமெரிக்காவின் கலிபோர்னியாக்காரனின் முகநூல் புகைப்படத்தை திருடி, உண்மையான உள் அலங்கார நிபுணர் ஆலன் மெக்கார்ட்டி பெயரில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களின் மோசடி வலையில் சிக்கி நியூ சவுத் வேல்ஸ் பெண் ரூ.32.5 லட்சத்தையும், டாஸ்மானியா பெண் சில லட்சங்களையும் இழந்துள்ளனர். ஆண்களின் ஏமாற்றுக் கருவியாக இருக்கும் காதல். முகநூலில் இன்னும் கூர்மை பெறுகிறது. காதலை முழுமையாக புரிந்து நமது முன்னோர்கள் அதன் தன்மை கருதியே காமம் என்றே அழைத்தனர். காதலின் அடுத்த கட்டம் காமம்தான்.
முகநூல் காதல் எல்லாம் மோசம் என்றில்லை. அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு 2,077,000 மக்கள் முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முகநூல் நிறுவன உரிமையாளர் சக்கர்பேர்க் கூட அதன்மூலமே தனது பழைய காதலியை கண்டடைந்தார்.

பாகிஸ்தானை சேர்ந்த இஸ்கான் என்ற இளைஞரை காதலித்த இந்தியாவை சேர்ந்த மெகருன்னிசா சுற்றுலா விசாவில் எல்லை கடந்து வந்த கலாம் பள்ளத்தாக்கில் காதலனை கண்டுபிடித்து திருமணம் செய்துகொண்டார்.
முகநூலில் இணைவோரில் 37சதவீதம் பேர் அன்பை தேடி அலையும் நெஞ்சினர் தான். அதற்கேற்ப அன்பு தேடும் அவல நெஞ்சங்களுக்கு அடைக்கலமாக இருப்பதோடு காம போருக்கு தயாராகும் காளையருக்கு படைக்கலமாகவும் முகநூல் பயன்படுகிறது. இதில் போலி பெயரில் கணக்கு வைக்கலாம் என்பது முதல் வசதி. சுயவிவரங்களை பொய், புனைவுகள் சோதனைக்கு அப்பாற்பட்டவை ஆதலால் கதை அளக்கலாம். வானவில்லையும் வளைக்கலாம். பெரும்பாலும் முகநூலில் பொய்யான விவரங்களையே குறிப்பிடுகின்றனர். ‘செட்டிங்’ என்னும் அரட்டைக்கு அதிக பொய் என்று அர்த்தம். பொய்யாக ஆரம்பிக்கும் தொடர்புகள் காலப்போக்கில் காதலாக கனிகிறது. இதனால் கொலை, தற்கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது.
ஆண்கள் அறிந்தே இதை பயன்படுத்துவதால் பெண்கள் ஏதும் தெரியாமல் அகப்படுத்துவதாலும் ஏமாற்றமும் இழிவும் அவர்களுக்கே உரித்தாகிறது. ஏமாறும் பெண்கள் பண்பாடு கருதி அதை வெளியில் சொல்லாமல் இருப்பதே இத்தகைய மனிதர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கவும், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படவும் காரணமாகிறது. காதல் கூட மானத்தின் ஒரு பரிமாணம், பண்பாட்டின் பரிணாமம் என்று உணர்ந்தால் அவசரப்பட்டு ஆபத்தை தேட மாட்டார்கள். ஊடகத்தில் ஊதி பெரிதாக்கப்பட்ட காதல் இளைஞர்கள் உள்ளங்களில் ஊஞ்சலாடுகிறது. அது ஒரு பருவ விளையாட்டாக மாறிப்போனது.
அறிமுகம் இல்லாத ஆண்களின் நட்பே ஆபத்து. அதையும் காதல், பாலுறவு வரை அனுமதிப்பது என்பது உச்சபட்ச அலட்சியம் என்பதை நமது பெண்கள் காலங்கடந்து உணர்கின்றனர். சமூக வலைத்தளத்தில் இணைவதே சமூக அந்தஸ்தாகவும் பெருமையாகவும் கருதும் மனப்போக்கு எள்ளி நகையாட தகுந்தது. தற்போது அதிலிருப்போரில் பாதிப்பேருக்கு மேல் அது தேவையற்றதாகவே இருக்கிறது. நிஜக்காதலே பொய்யாகிப் போன இந்த நவீன யுகத்தில் நிழல் காதல், தொலைபேசி காதல், இணையதள காதலை வளர்த்தால் அது உயிராபத்திலும் பொருள் பறிப்பிலும் நிம்மதி இழப்பிலும் தான் முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *