• Fri. Apr 19th, 2024

சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரி

சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரித் திட்டத்தை அமல்படுத்த நிதி ஆயோக் ஆலோசனை செய்து வருகிறது.
இதற்கான ஆய்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

நாளுக்கு நாள் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் உடல் பருமன் அடைந்து அவதிக்குள்ளாகின்றனர். குழந்தைகள் மத்தியிலும் உடல் பருமன் நோய் ஏற்படுகிறது.
இதைத் தடுப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி மக்கள் தொகையில், அதிகரித்து வரும் உடல் பருமனை சமாளிக்க நிதி ஆயோக் அமைப்பு சில திட்டங்களை முயற்சித்து வருகிறது. இதற்காக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களைக்கொண்டு அரசாங்கக் கொள்கைகளை வகுக்கும் வல்லுநர் குழு ஒன்றை நியமித்தது நிதி ஆயோக்.

இந்த பிரத்யேகமான சிநதனைக்குழுவைக் கொண்டு ஆய்வு ஒன்றை நிதி ஆயோக் மேற்கொண்டது. இதுகுறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2021-22க்கான ஆண்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5) 2019-20படி, பருமனான பெண்களின் சதவீதம் 2015-16ல் 20.6 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 18.4 சதவீதமாக இருந்த ஆண்களின் சதவீதம் தற்போது 22.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனை அடுத்து குழந்தைபெறும் தாய்மார்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு உடல் பருமன் ஏற்படுவது போன்றவற்றைத் தடுப்பது குறித்த தேசிய ஆலோசனைக் குழுவானது, பிரச்சினையைச் சமாளிப்பதற்கான பல்வேறு கொள்கைகள் பற்றி ஜூன் 24, 2021 அன்று, நிதி ஆயோக் உறுப்பினர்(சுகாதாரம்) தலைமையில், பல்வேறு ஆதாரங்களின்படி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

உணவுப் பொருள்களுக்கு வரி விதித்தால் பருமன் குறையும்: அதன்படி, சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு அதிக வரி விதிக்கலாம். இதனால் மக்கள் தொகையில், உடல் பருமன் அதிகரித்து வருவதை சமாளிக்க முடியும். உணவுப் பொட்டலங்களின் முன் பகுதியிலேயே அதுகுறித்து லேபிள் ஒட்டப்படுவதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம்.
தற்போதைய நிலையில் பிராண்டட் அல்லாத நம்கீன்கள், புஜியாக்கள், காய்கறி சிப்ஸ் மற்றும் சிற்றுண்டி உணவுகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளன, பிராண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது.

“நிதி ஆயோக், IEG மற்றும் PHFI உடன் இணைந்து, எச்எஃப்எஸ்எஸ் உணவுப்பொட்டலங்களின் முன்பக்கத்தில் உப்பு,சர்க்கரை அளவுகுறித்து லேபிளிங் செய்ய முடிவு செய்துள்ளது.
கொழுப்புகள், சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு வரிவிதிப்பு போன்ற மத்திய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கான ஆதாரங்களை மதிப்பாய்வு செய்து வருகிறது.
இவ்வாறு நிதிஆயோக் 2021-22 ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *