• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

வலிப்பு வந்தது போல் சாலையில் விழுந்து நடித்துப் பணம் பறிப்பு..,

BySeenu

Aug 3, 2026

கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகளை, அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலு திரைப்படப் பாணியில் நடந்த இந்த ஏமாற்று வேலை கோவை மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி, லட்சுமிபுரம் விஸ்வநாதபுரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில், மர்மப் பெண் ஒருவர் திடீரென வீடுகளின் வாசலிலும் சாலையிலும் விழுந்து, கடுமையான வலிப்பு நோய் (Seizure) வந்தது போல உடலை நடுங்கச் செய்து தவிப்பது போல் நாடகமாடி உள்ளார்.

​இதைக் கண்டு பதறிப்போன அப்பகுதி வீடுகளில் இருந்த ஆண்களும், பெண்களும் மனிதாபிமான அடிப்படையில் ஓடிவந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பியது போல் நடித்ததால், “பாவம்… சொந்த ஊருக்குச் செல்லப் பணமில்லாமல் தவிக்கிறாரோ” என்று எண்ணி, அங்கு இருந்தவர்கள் தங்களது சொந்தக் பணத்தைக் கொடுத்து அவரை ஊருக்குச் செல்லுமாறு வழியனுப்பி வைத்து உள்ளனர்.

பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்ற அந்தப் பெண்ணின் அசைவுகள் மற்றும் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர், அவருக்குத் தெரியாமல் ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்று தீவிரமாகக் கண்காணித்து உள்ளனர்.

​அப்போது, அடுத்த தெருவிற்குச் சென்ற அந்தப் பெண், அங்கு உள்ள மற்றொரு வீட்டின் வாசலிலும் அதேபோல வலிப்பு வந்தது போல் விழுந்து மீண்டும் நடித்துப் பணம் பறிக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழ் திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி பாணியில், ஊர் ஊராகச் சென்று வலிப்பு நாடகமாடி பணத்தைப் பறிக்கும் நெட்வொர்க் வேலை இது என்பதை உணர்ந்த பொதுமக்கள், உடனடியாகத் தங்களது செல்போனில் அந்த நாடகத்தைக் கையும், களவுமாக வீடியோ பதிவு செய்தனர்.

தற்போது அந்தப் பெண் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து ஏமாற்றும் திடுக்கிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது.

​மனிதாபிமான அடிப்படையிலும் இரக்க குணத்தோடும் உதவும் கோவை மக்களின் நல் எண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் இதுபோன்ற மோசடிக் கும்பல் மீது காவல் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.