• Sat. Apr 20th, 2024

ஈரோடு தேர்தல் மனு தாக்கல் செய்யும் பணி நாளை முடிவுக்கு வருகிறது..!!

ByA.Tamilselvan

Feb 6, 2023

ஈரோடு இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்து விட்ட நிலையில் அதிமுக நாளை மனுதாக்கல் செயயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறக் கூடிய முதல் இடைத்தேர்தலாக இருப்பதால் இது தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தி.மு.க. கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் இது வரை அறிவிக்கப்படவில்லை. முன்னதாக இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். அவரை தொடர்ந்து சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தன், டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் மனு தாக்கல் செய்து விட்டனர். இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்து விட்டார். ஆக, மனு தாக்கல் செய்ய வேண்டிய ஒரே கட்சியாக தற்போது அ.தி.மு.க. உள்ளது. அனேகமாக அ.தி.மு.க. வேட்பாளர் வரும் 7-ம் தேதி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, இந்த தேர்தலில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடும் போட்டி என்னவோ, தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கும், அ.தி.மு.க. வேட்பாளருக்கும் இடையேதான் இருக்கும். அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *