• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஏடிஜிபி கல்பனா நாயக்கிற்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்… ஈபிஎஸ் வலியுறுத்தல்

ByP.Kavitha Kumar

Feb 3, 2025

ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தில் முறைகேட்டை வெளிப்படுத்திய காரணத்தால் தன்னை உயிரோடு எரிக்க சதி நடந்ததாக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது முதலில் மின் கசிவு என கூறப்பட்ட நிலையில், தன்னை கொலை செய்ய திட்டமிட்ட சதி என கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் தமிழக காவல் துறை தலைவர் ( டிஜிபி), தமிழக தலைமை செயலாளர் ஆகியோருக்கு புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் குளறுபடிகளை சுட்டிக்காட்டியதற்காக, தன்னைக் கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தாக்கப்பட்டதாக காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் ஐபிஎஸ் அவர்கள் தெரிவித்திருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “சற்று நேரம் முன்பு நான் சென்றிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன்” என்ற அவரின் கூற்று நெஞ்சைப் பதற செய்கிறது.தங்கள் துறையின் ஊழல்களைச் சொன்னதற்கே, அவரை கொலை செய்ய துணிந்து விட்டார்கள் என்பது மிகவும் கீழ்த்தரமானது , இந்த செயலுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபியை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபியாக இருந்தால் கூட, மிரட்டலும், கொலையும் தான் பதிலா? இந்த சூழல் இருக்கும் ஆட்சியில், மக்கள் எப்படி தங்கள் குறைகளைத் தைரியமாக சொல்ல முடியும்? ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது என்பது, மு.க.ஸ்டாலின், தான் நிர்வகிப்பதாக சொல்லும் காவல்துறையின் மேல் தானே வைத்துள்ள பெரும் கரும்புள்ளி. இந்த கண்டனத்திற்குரிய வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.

ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும். உடனடியாக ஏடிஜிபி கல்பனா நாயக் ஐ.பி.எஸ். அவர்களின் குற்றச்சாட்டை வெளிப்படைத் தன்மையுடன் முறையாக விசாரித்து, இதில் தொடர்புள்ளோர் இருப்பின், அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.