

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. வருகிற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்குவது என்ற கொள்கையுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளன. எனவே கூட்டணியில் பிரச்சினைக்கு வாய்ப்பே இல்லை என அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் நடிகை கௌதமி பழனியில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்து விட்டு இதனை தெரிவித்தார்.

பழனி முருகன் கோவிலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு இணை செயலாளரான நடிகை கவுதமி இன்று சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் வழியாக மலைக்கோவில் சென்றார். தொடர்ந்து முருகப்பெருமான் சன்னதி சென்று தரிசனம் செய்தார். அதோடு தங்கரதம் இழுத்தும் வழிபட்டார். பின்பு மீண்டும் ரோப்கார் வழியாக அடிவாரம் வந்தார். பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு வந்து வழிபட்டேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. வருகிற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்குவது என்ற கொள்கையுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளன. எனவே கூட்டணியில் பிரச்சினைக்கு வாய்ப்பே இல்லை. டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேலும் நடக்குமோ? என்ற அளவில் உள்ளன. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? என்று பேசுகிற அளவுக்கு தான் நிலைமை உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பான வாழ்கை சூழல் இல்லை.

விலைவாசி உயர்வு உச்சத்தில் உள்ளதால் மக்கள் திணறி வருகின்றனர். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.எல்லா துறைகளிலும் பிரச்சினை உள்ளது. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் ஊட்டியில் குளு, குளு சீசனை அனுபவித்து, மலர்களுடன் போட்டோ எடுத்து கொண்டிருக்கிறார். அப்படியென்றால் மக்களின் பிரச்சினைகளை எப்படி புரிந்திருக்கிறார்? என்று தெரியவில்லை. ஆனால் கையில் பேப்பரை வைத்து கொண்டு சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று மட்டும் கூறுகிறார். மக்களின் வாழ்க்கையே தரைமட்டம் ஆனது இந்த ஆட்சியில் தான். இவ்வாறு அவர் கூறினார்.
பின்பு அவருடன் வந்த மருத்துவர் அணி நிர்வாகி டாக்டர் சரவணன் கூறும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் தான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்து கல்வியில் இடஒதுக்கீடு கொண்டு வந்தோம். அதேபோல் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான். ஆனால் தி.மு.க. ஏதோ சாதித்து விட்டதாக புகழ்கிறார்கள். எப்படியும் 2026 தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையும் என்றார்.

