நற்றிணைப் பாடல் 196:
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை,
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,
மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்,
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்,
சிறுகுபு சிறுகுபு செரீஇ,
அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே?
பாடியவர்: வெள்ளைக்குடி நாகனார்
திணை: நெய்தல்
பொருள்:
பல கூறுகள் ஒன்றாகச் செறிந்தாற் போன்ற பலவாய கதிர்களின் இடையே இடையே பாலை முகந்து வைத்தாற்போன்ற குளிர்ச்சியையுடைய வெளிய நிலாவினையுடைய: மால் பிடர் அறியா நிறை உறு மதியம் மேகத்தின் பிடர் மேலே தோன்றிப் பிறரால் அறியப்படாத எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே!; நீதானும் நிறைவும் நேர்மையும் உடையை ஆதலானும்; நினக்குத் தெரியாத வணணம் மறைந்து உறையும் உலகமொன்று இன்மையானும்; எனக்குத் தோன்றாது மறைந்தொழுகும் எங்காதலர் இருக்கும் இடத்தினைக் காட்டுவாயாக! என்று இரந்து வேண்டினாள், அவள் அங்ஙனம் இரந்து வேண்டியும் திங்கள் விடை கூறிற்று இல்லையாகாலின் அதன்மேல் வெறுப்புற்று மீட்டும் அதனை நோக்கித் திங்களே!; நீ அறிந்த அளவு சான்று கூறாது பொய்யை மேற்கோடல் காரணமாக; நல்ல அழகிழந்த என் தோள்போல் வாட்டமுற்று; நாடோறும் சிறுகிச் சிறுகிச் குறைந்து நின் விழிப்புலம் மறைபடுதலாலே; நீ காட்டுவதுதான் இயலுமோ? இயலாதன்றே; என்றாள்.