• Sun. Apr 28th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Jul 2, 2023

நற்றிணைப் பாடல் 197:

‘தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே;
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ!
தௌந்தனம் மன்ற; தேயர் என் உயிர்’ என,
ஆழல், வாழி- தோழி!- நீ; நின்

தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு,
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய,
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல்
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள்
இன் இசை முரசின் இரங்கி, மன்னர் .

எயில் ஊர் பல் தோல் போலச்
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே

பாடியவர்: நக்கீரர்
திணை: பாலை

பொருள்:

தோழீ! தோள்கள் வளைகள் நெகிழ்ந்தன நெற்றி படர்ந்த பீர்க்க மலர் போலப் பசலை பரந்தது; கண்களும் தண்ணிய நீர் பெருகின; இவை இங்ஙனமாதல் திண்ணமாக எம் உயிர் இறந்தொழிதற் பொருட்டே என்பதனை யாம் நன்றாகத் தெரிந்துகொண்டோம் என்று; அழாதே கொள்! இவ்விடரொழிந்து நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; நினது தாழந்து தழைந்த கூந்தல் போல இறங்கிய காலுடனே; வண்டுகள் பொருந்திய புதிய மலர்களை ஒள்ளிய நீர்த்துறையின்கண்ணே கொய்து கொணர்ந்த; பெரிய மடப்பத்தையுடைய மகளிரின் முன்கையிலணிந்த சிறிய கோற்றொழிலமைந்த பொன்னாலாகிய தொடிபோல மின்னி; கூட்டங்கொண்ட இனிய ஒலியையுடைய முரசுபோல முழங்கி; அரசர்களுடைய அரணாகிய மதில்மேலே பகைவருடைய படைசென்று பாயாதவாறு ஓம்பாநின்ற பலவாகிய கிடுகுபோல விசும்பிலே செல்லும் மேகம்; அவரது நல்ல மலை நாட்டின் கண்ணே தவழாநிற்கும்; அம்மழை நின் கூந்தல் போலிருத்தலானே அதனைக் காண்டலும் நின்னைக் கருதி இன்னே வருகுவர் காண்;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *