• Fri. Jan 17th, 2025

கோடை வெயிலால் சென்னையில் மின்பயன்பாடு உச்சம்

Byவிஷா

May 31, 2024

கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக சென்னையில் மின்பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது.
தமிழகத்தின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது.
இதனால் தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இதற்கேற்ப தமிழகத்தின் மின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக சென்னையில் கடுமையாக வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக, நேற்று முன்தினம் நடப்பாண்டில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை சென்னை, மீனம்பாக்கத்தில் பதிவானது. அன்றைய தினம் சென்னையின் மின் பயன்பாடும் உச்சத்தை அடைந்துள்ளது.
அதன்படி, மே 29-ம் தேதி 97.53 மில்லியன் யூனிட் என்ற அளவில் மின்சார பயன்பாடு இருந்தது. இதற்கு முன்பு, மே 3-ம் தேதி 97.43 மில்லியன் யூனிட் என்பதே சென்னையின் அதிகபட்ச மின் பயன்பாட்டு அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.