• Sat. May 18th, 2024

பேராசிரியரின் பாலியல் தொல்லையால்..,முதுநிலை மருத்துவ மாணவி தற்கொலை..!

பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரால், கடிதம் எழுதி வைத்து ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட முது நிலை மருத்துவ மாணவியால், ஏனைய மருத்துவ மாணவிகள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(27) என்பவர் முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் நேற்று (06.10.23) வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் இருந்துள்ளார். அவர் கல்லூரிக்குச் செல்லாதது குறித்து தகவல் அறிந்த சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மதியம் 2 மணி அளவில் ஹாஸ்டலில் சென்று பார்த்தபோது சுகிர்தா இருந்த அறை உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து குலசேகரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் அறை கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுகிர்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார். அறுவைச் சிகிச்சையின் போது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்தை தனக்குத் தானே ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவரது அறையில் தற்கொலைக்கு முன் எழுதப்பட்ட ஆங்கில கடிதம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகையில், “தனது தற்கொலைக்கு ஒரு பெண் பேராசிரியர் உள்பட 3 பேராசிரியர்கள் காரணம் என மருத்துவ மாணவி கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது. அதில் ஒரு ஆண் பேராசிரியர் உடலளவிலும், மனதளவிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “இந்த வழக்கு குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாராணையில் தான் உண்மை விபரம் தெரியவரும்” என்றனர்.
மேலும் இதுகுறித்து மாணவிகளிடம் விசாரணை நடத்த நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *