2026-2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிகள் வரும் ஜூன் மாதம் துவங்கப்பட உள்ள சூழலில் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் தரம், வேகம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 13 தனியார் பள்ளிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை உசிலம்பட்டி டிஎஸ்பி ஷண்முகசுந்தரன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் கார்மேகம், உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் சுகந்தி இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.,

இதில் வாகனத்தின் அமைப்பு, மஞ்சள் நிறம் வண்ணம், வாகனத்தின் முன் மற்றும் பின் புறங்களில் பள்ளி பேருந்து என்ற வாசகம், இடது பின்புறத்தில் பள்ளியின் பெயர் முகவரி தொலைபேசி எண், வேக கட்டுப்பாடு, அவசரத் தேவை கதவு, கேமரா, முதலுதவி பெட்டி தீயணைப்பான்கள் உள்ளிட்ட 17 சிறப்பு விதிகள் குறித்தும் பள்ளி வாகனத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கு முன்னதாக தனியார் பள்ளி ஓட்டுனர்களுக்கு அவசர தேவையின் போது தீயணைப்பானை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து உசிலம்பட்டி தீயணைப்பு நிலை அலுவலர் கருப்பையா தலைமையில் தீயணைப்புத்துறையினர் பயிற்சிகள் வழங்கினர்.



