• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்..,

கோவை மாநகர் காவல்துறையின் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவின்படியும், கோவை மாநகர் காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், கோவை மாநகர் தெற்கு காவல் துணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படியும், போத்தனூர் காவல் உதவி ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அசோக்குமார் அவர்கள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல, மனநல மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதோடு, குடும்ப அமைதியை பாதித்து குற்றச்செயல்கள் அதிகரிக்கவும் காரணமாகிறது என விளக்கப்பட்டது. மேலும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படக்கூடும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், போதைப்பொருள் பழக்கத்தால் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப உறவுகள் பாதிக்கப்படுவதுடன், சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும் சூழலும் உருவாகும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து விலகி விளையாட்டு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில், போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தமாட்டோம், மற்றவர்களையும் பயன்படுத்த விடமாட்டோம், போதை இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்போம் என பொதுமக்களிடம் உறுதிமொழி பெறப்பட்டது.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், போத்தனூர் காவல் நிலைய அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்று விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.

போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.