தங்கம் விலை இன்று சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.57ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகளும், நகைப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, அதிக பட்சமாக கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி நாளன்று ஒரு சவரன் தங்கம் ரூ.59,640 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இது பார்க்கப்பட்டது. இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தீபாவளி அன்று தங்கத்தின் விற்பனையும் வெகுவாக குறைந்ததாக வணிகர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தங்கத்தின் விலை சற்று குறையத் தொடங்கியது. அதன்படி, நவம்பர் 1ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது. 2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,960க்கு விற்கப்பட்டது. மேலும் கடந்த 5ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,355க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.58,840க்கும் விற்கப்பட்டது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்தது. ஆனால் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. இதற்கு காரணம் அமெரிக்க அதிபர் தேர்தல் என கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மாலை தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்வாகி உள்ளார். இதைத்தொடர்ந்து தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில் சேர் மார்க்கெட் கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை தடாலடியாக குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு இன்று ரூ. 165 குறைந்து ரூபாய் 7 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57 ஆயிரத்து 600க்கு விற்கப்படுகிறது. இதனால், தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூபாய் 1,320 குறைந்துள்ளது. அதே போல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.102-க்கு விற்பனையாகி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை
