• Wed. Apr 24th, 2024

சென்னையை அதிரவைத்த இரட்டை கொலை: 1000 பவுன் நகைகள் மீட்பு

ByA.Tamilselvan

May 8, 2022

சென்னை மயிலாப்பூர் பகுதியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமல்லஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்துள்ளது எனலாம். நகைக்கு அசைப்பட்டு நடைபெற்ற கொலையில் தற்போது குற்றவாளிகள் பிடிக்கபட்டுநகைகள் மீட்டுகப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் சேர்ந்த தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலையில் சென்னை திரும்பினர். கணவன்-மனைவி இருவரும் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். இருவரையும் அவர்களது டிரைவர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கிய டிரைவர் கிருஷ்ணா இருவரையும் வீட்டில் வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில் அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர்.
தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரிகாட்டில் பிரமாண்ட பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு உடலை கொண்டு சென்று புதைப்பதற்கு முடிவு செய்தனர். இதன்படி ஸ்ரீகாந்தின் காரிலேயே 2 பேரின் உடல்களையும் மூட்டை கட்டி தூக்கி போட்டனர். பின்னர் மயிலாப்பூரில் இருந்து மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டுக்கு சென்றனர்.அங்கு ஸ்ரீகாந்த், அனுராதா இருவரின் உடல்களையும் பெரிய குழி தோண்டி புதைத்தனர்.
பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய பிறகே இருவரும் கொன்று புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இருவரும் நேற்று மாலை 6.30 மணி அளவில்தான் பிடிபட்டனர். இதன் பின்னர் உடனடியாக உடல்களை தோண்டி எடுக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று காலையில் இருவரின் உடல்களும் புதைக்கப்பட்ட பண்ணை தோட்டத்துக்கு போலீசார் கொலையாளிகளை இன்று பிற்பகலில் அழைத்துச் செல்கின்றனர். உடல்கள் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.
இந்த கொலை வழக்கு குறித்து தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:-
மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதியை கொலையாளிகள் இருவரும் திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து நேற்று அதிகாலையில் ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் வீடு திரும்பியதும், முதல் மாடியில் வைத்து மனைவி அனுராதாவை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர். கீழ் தளத்தில் வைத்து ஸ்ரீகாந்தை கொன்றுள்ளனர்.
பின்னர் இருவரது உடலையும் போர்வையில் சுற்றி காரில் எடுத்துச் சென்று மாமல்லபுரம் அருகே உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.
இந்த கொலை சம்பவத்தில் டிரைவர் கிருஷ்ணா, அவரது நண்பரான டார்ஜிலிங்கை சேர்ந்த ரவிராய் இருவரும் ஈடுபட்டுள்ளனர். நகை பணத்துக்கு ஆசைப்பட்டு இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளிடமிருந்து 1000 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதன் எடை 9 கிலோவாகும். 60ல் இருந்து 70 கிலோ வரையில் வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.நேற்று மதியம் 1 மணி அளவில் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. உடனயாக தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.போலீஸ் பிடியில் சிக்காமல் எப்படியாவது நேபாளத்துக்கு தப்பிச் சென்று விட முடிவு செய்து காரில் வேகமாக சென்றனர். 6 அல்லது 7 மணி நேரம கழித்திருந்தால் நேபாளம் சென்றிருப்பார்கள்.ஆனால் அதற்குள் ஆந்திரா போலீசாரின் துணையுடன் கொலையாளிகள் இருவரையும் பிடித்து விட்டோம்.
இவ்வாறு கூடுதல் கமிஷனர் கண்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *