நடிகர் தனுஷ் நடிப்பில் பிப்ரவரி 17 அன்று திரைக்கு வர இருக்கும் “வாத்தி” என்ற திரைப்படத்தின் பெயர் ஆசிரியர் சமுதாயத்தை அவமதிக்கும் செயலாக உள்ளதால் படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி பாண்டிச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கில் ” சார்” எனும் பெயரிலும் அதே படம் தமிழில் ” வாத்தி” என்ற பெயரிலும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் பெயர், ஆசியர்கள் சமுதாயத்தை அவமதிக்கும் சொல்லாக உள்ளது என பாண்டிச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த புகார் குறித்து பாண்டிச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சீனிவாசன் புதியதலைமுறைக்கு அளித்துள்ள பேட்டியில், “ஒரு சமுதாயத்தை உருவாக்கும் மிகவும் உன்னதமான சமூகம் ஆசிரியர்கள் சமூகமாகும். அதனால் தான் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கடைபிடிக்கின்றோம். பல்வேறு அரசியல் தலைவர்கள்கூட ஆசிரியர்களாக பணியாற்றி பின்னர் மக்கள் பணியாற்றியுள்ளார்கள். மனித வாழ்வின் தொடக்கத்தில் மாதா, பிதா, குரு என மூன்றாவது அந்தஸ்தில் இருந்து கல்வியை புகட்டி சிறந்த மனிதனாக உருவாக்கும் புனித பணியை மேற்கொள்கின்றனர்.
அந்த ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் வகையில் தமிழில் மட்டும் தரக்குறைவாக கொச்சையான வார்த்தையில் “வாத்தி” என்று பெயரிட்டு வைக்கப்பட்டுள்ளதிரைப்படத்தால் ஆசிரியர்கள் மனவேதனை அடைந்துள்ளார்கள். இதைக் கண்டிப்பதோடு படத்தின் பெயரை மரியாதையான வார்த்தைகளால் “வாத்தியார்” என்றோ, தெலுங்கில் வைத்தது போல “சார்” என்றோ தமிழில் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். ஆசியர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் வெளியாகும் இந்த படத்தின் பெயரை மாற்ற ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் இன்று பெரும் தலைவர்களாக உள்ளார்கள் அவர்களும் குரல்கொடுக்க வேண்டும்” என சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
வாத்தி படத்துக்கு ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு ஏன் தெரியுமா?
