• Sat. Apr 20th, 2024

Do or die அல்ல.. do and die.. கடமையை முடித்துவிட்டு தான் சாகவேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Byமதி

Dec 20, 2021

அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், எப்பொழுதும் கட்சிகள் கூட்டணிகள் வைக்கிறதோ இல்லையோ, ஆனால், நீங்கள் எப்போதும் கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள். நான் எப்போதுமே அதிகம் பேச மாட்டேன். செயலில் நம்முடைய திறமையை நாம் காட்டிட வேண்டும்.

அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம், அவர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அரசு ஊழியர்களுக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். கடும் நெருக்கடியான நிதிசூழல் இருப்பினும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்.

பதவி உயர்வு பெறும் அரசு ஊழியர்கள் அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி பெற நடவடிக்கை, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணி தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழக் கூடிய மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர்களின் வயது வரம்பைக் கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும். அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும்.

ஜி.எஸ்.டி. முதல் வெள்ள நிவாரணநிதி வரை மத்திய அரசு சரியாக வழங்குவதில்லை. கொத்தடிமைகளை போல் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் மாநில அரசு உள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. do or die, என்னை பொறுத்தளவில் அதை do and die என்று எடுத்துக்கொள்வேன். செய்துவிட்டு செத்துமடி என்று சொல்வேன். என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த கூட்டத்திற்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு , சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு,
சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அ.சவுந்தரராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *