• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

திமுக முப்பெரும் விழா… செந்தில்பாலாஜியின் பிரம்மாண்ட மேஜிக்!

Byதரணி

Sep 23, 2025

கரூரில் மிகப்பிரம்மாண்டமாக செப்டம்பர் 17 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது  தி.மு.கழக முப்பெரும் விழா.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி திமுக தலைமையால் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

திமுகவின் தலைமைக் கழகம் நடத்தி வந்த ஒரே விழாவான முப்பெரும் விழா, முதல்வர்
 ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து வேறு வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் உள்ள கோடங்கிபட்டியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.

1 லட்சம் நாற்காலிகள் போடப்பட்ட நிலையில் நாற்காலி போதாமல் விழா அரங்கிற்கு வெளியே 1.5 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டனர்.

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இருக்கைகளில் திண்பண்டங்கள் உள்ளடக்கிய பை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  இந்த பையில் மைசூர்பாக்கு, மிக்சர், பிஸ்கெட் பாக்கெட், 1 லிட்டர் தண்ணீர் பாட்டில், டிஷ்யூ பேப்பர் முதலியவை இருந்தன.

திமுக வரலாற்றில் முதல் முறையாக 2 இலட்சம் தொண்டர்களுக்கு மேல் கூடிய முப்பெரும் விழா என்ற சாதனையை படைத்துள்ளார் செந்தில்பாலாஜி.  அமைச்சர் பொறுப்புகளில் இல்லாவிட்டாலும் ஏற்பாட்டில் பிரம்மாண்டப்படுத்திவிட்டார்.

விழா தொடக்கத்தில் வந்த முதல்வர் ஸ்டாலினை  நுழைவு வாயிலில் இருந்து மேடை வரை இருபுறமும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர்.

கரூர் மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.

அதன்பின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலம் வாரியாக சிறப்பாக செயல்பட்ட கழக நிர்வாகிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இந்த முப்பெரும் விழாவுக்கு வரவில்லை.

இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான   கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருதும், பாளையங்கோட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் சீதாராமனுக்கு அண்ணா விருதும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும், மறைந்த தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்திற்கு பேராசிரியர் விருதும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருதும், பத்திரிகையாளர் பன்னீர் செல்வத்துக்கு முரசொலி செல்வம் விருதினையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

விருதுகளை பெற்றுக் கொண்டவர்கள் சார்பில் பேசிய கனிமொழி எம்பி,

“ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு கனவு இருக்கும்.  எனக்கு இருக்கக்கூடிய ஒரே கனவு…  அது தலைவர் கலைஞர் அவர்கள் பெற்ற அதே விருதை பெரியார் விருதை இன்று பெற்றிருக்கிறேன்.  அதை நிறைவேற்றி தந்திருக்கக் கூடிய என்னுடைய முதலமைச்சர்,  கழகத்தின் தலைவர், அண்ணன் தளபதி அவர்களுக்கு என்னுடைய நன்றி, நன்றி, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொட்டக்கூடிய மழையிலும் இங்கே நின்று கொண்டிருக்கக்கூடிய உடன்பிறப்புகளை பார்க்கும் பொழுது இந்தப் படை போதுமா…

எந்தத் தேர்தலையும் -எந்த பகைவர்களாக இருந்தாலும், அது நம்முடைய பரம்பரை பகைவர்களாக இருக்கட்டும்…  பாரம்பரிய பகைவர்களாக இருக்கட்டும்…  புதிதாக வரக்கூடியவர்களாக இருக்கட்டும்… அத்தனையையும் வென்று காட்டுவோம்… வென்று காட்டுவோம் என்று சூளுரைக்கக் கூடிய  இந்த படை போதும்! வெற்றி நிச்சயம் நன்றி வணக்கம்” என்று உரையாற்றினார்.    

இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி பேசும்போது,  “கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளில் இருந்து 2026 தேர்தலுக்கான வெற்றியை தொடங்குவோம்; வரலாறு படைப்போம்” என உரையாற்றினார்.

கொட்டும் மழையிலும் முதல்வர் ஸ்டாலின் பேச்சைக் கேட்க கட்டுக்கோப்பாக. நாற்காலிகளை தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு ஆவலோடு  காத்திருந்தனர் லட்சக்கணக்கான தொண்டர்கள்.

ஸ்டாலின் பேசும்போது,  “ இதே நாளில் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்ட கழகம் 75 ஆண்டுகள் மட்டுமல்ல நூறாண்டு காணப்போகிறோம். முப்பெரும் விழாவை பிரம்மாண்ட மாநாடு போல ஏற்பாடு செய்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோடு போட சொன்னால் ரோடு போடும் செயல் வீரர் செந்தில்பாலாஜி.  இதுவரை கண்டிராத மிகப் பிரம்மாண்டமான முப்பெரும் விழா” என செந்தில்பாலாஜியை பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் அவர், “இந்தியாவில் ஆயிரக்கணக்கான இயக்கங்கள் இருக்கின்றன. நம்மைப் போல் கொள்கை உணர்வு கொண்டவர்களைக் கொண்ட இயக்கம் வேறு இல்லை . இந்தியாவிலேயே மாநில கட்சி ஒன்று ஆட்சியைப் பிடித்த வரலாற்றை உருவாக்கியது திமுக தான்.

மாற்று என்று சொல்லக்கூடியவர்கள் எதை மாற்றப் போகிறார்கள்? மாற்று மாற்று என்று சொன்னவர்கள் தான் மாறி மறைந்து போனார்கள். ஆனால் திமுக மட்டும் மக்கள் மனதில் இன்று என்றும் மறைவதில்லை.

பல்வேறு நெருக்கடியிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இன்று இருக்கிறது. இதனால் திராவிட மாடல் ஆட்சியை பார்த்து பலருக்கும் வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது.

அதிமுக தொடங்கிய போது அண்ணாயிசம் என்று சொன்னார்கள். இப்போது அதை அடிமையிசமாக மாற்றி அமித்ஷாவிடம் சரணம் என சரண்டர் ஆக்கிவிட்டார் எடப்பாடி. முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு? காலில் விழுந்த பிறகு கர்சிப் எதற்கு?

ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு இழைத்து வரும் கல்வி நிதி மறுப்பு, நீட் விலக்கு மறுப்பு, தொகுதி மறுவரையறை போன்ற அநீதிகள் எல்லாம் இங்கு பலிக்காது.

அடக்கு முறைக்கு No Entry! ஆதிக்கத்திற்கு No Entry! இந்தித் திணிப்பிற்கு No Entry! மொத்ததில் பாஜகவிற்க்கு No Entry! தான்..

உரிமை போர் நடத்தி நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

போராடி போராடி தமிழர்களை, தமிழ்நாட்டை தலை நிமிர்த்துகிறோம். இப்படி தலை நிமிர்ந்த தமிழ்நாட்டை ஒருநாளும் தலை குனிய விடமாட்டோம்” என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

டெல்லிக்கு கேட்பதுபோல் எல்லோரும் சேர்ந்து சொல்வோம் என ஸ்டாலின் கூறியவுடன் தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன். தமிழ் நாட்டை தலைகுனிய விட மாடடேன் என தொண்டர்கள் முழங்கினர்.

விழா நிறைவில் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.

மழை மட்டும் பெய்யவில்லை என்றால் திமுக முப்பெரும் விழா இன்னும் சிறப்பாக நடந்திருக்கும் என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.