மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைதேர்தலில் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி வெற்றிபெற திமுக முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆட்சியர் அனீஷ் சேகரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் முள்ளாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது..,
மதுரையில் 16வது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கு அமைக்கப்பட்டுள்ள 97 வாக்கு சாவடிகளில் 10 மையங்களில் மட்டுமே சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர். மற்ற வாக்கு சாவடி மையத்திற்கும் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும், மக்கள் அச்சுறுத்தல் இல்லாமல் வாக்களிக்க நடவடிக்கை வேண்டும். உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை முறையாக மாவட்ட நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
திருமங்கலம் பார்முலாவை செயல்படுத்தி திமுக வெற்றி பெற முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. அதிமுக வெற்றியை தடுக்க அரசு நிர்வாகத்தை திமுக தவறாக பயன்படுத்தி வருகிறது. திமுகவினர் செய்யும் பணப்பட்டுவாடா குறித்து ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளோம். ஆளும்கட்சி அதிகார துஷ்பிரயோகம் தொடர்ந்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்’ என்றார்.
அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனென்றால், தி.மு.க மாதந்தோறும் மகளிர்க்கு 1000ரூபாய் வழங்ப்படாததால் அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அம்மா திட்டமான தாலிக்கு தங்கம் திட்டம், முதியோர் உதவித்தொகை, பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜக அத்துமீறல் நடைபெறுகிறது. திமுகவினர் வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்கின்றனர். நாங்கள் மதுரைக்கு செய்த சாதனைகளை பட்டியிலிட்டு வாக்கு கேட்கிறோம். மக்கள் 100 சதவீதம் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கினார்கள். குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி எங்களுக்கு சாதமாக உள்ளது என்றார்.