தமிழ்நாடு முழுவதும் தேசிய தலைவர் என்று போற்றப்பட்ட மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் 26.11. விழாவையும் ஈழ உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக மறுநாள் நவம்பர் 27 அன்றைய தினத்தை மாவீரர் தினமாகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்பட்டு தமிழ் உணர்வையும் மொழி உணர்வையும் நாட்டுணர்வையும் நசுக்கும் விதமாக திமுக செயல்படுகிறது என்று புதுக்கோட்டையில் இருந்து கிளம்பிய குரல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்றும் சந்தனக்காட்டு வீரப்பனுடன் பல காலம் பயணித்தவர் என்றும் தமிழர் கழகத்தின் மாநில செயலாளர் என்றும் குறிப்பிடப்படும் புதுக்கோட்டை சேர்ந்த மணிகண்டன் இது குறித்து கூறுகையில்…
தமிழ்நாட்டில் கடந்த பல 10 ஆண்டுகளாக மாவீரர் நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. ஒவ்வொரு நவம்பர் 26 ஆம் தேதியை தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது பிறந்த நாளையும் அதேபோல் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை மாவீரர் வாரமாகவும் கொண்டாடப்பட்டு வந்தது. இலங்கையில் இவ்வளவு அடக்குமுறைக்கு பிறகும் இன்றளவும் அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் நிலைமையே வேறாகி விட்டது. ஒரு காலத்தில் எல்லா இடங்களிலும் மாவட்ட தலைநகரங்கள் கிராமங்கள் ஊர்கள் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வந்தன.
நவம்பர் 26 ஆம் நாள் பிரபாகரன் பிறந்தநாள் என்பதால் அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு சாக்லேட் வாங்கி கொடுப்பது முதல் இனிப்பு கேக்குகள் வாங்கி வழங்குவது வரை எல்லா இடங்களிலும் பகல் நேரங்களில் சிறப்பாக நடக்கும். அதேபோல் மறுநாள் மாவீரர் தினத்தை முன்னிட்டு கவியரங்கங்கள் கருத்தரங்கங்கள் பட்டிமன்றங்கள் என தமிழ்நாடு முழுவதும் நடந்தேறின. மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி கூட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன.ஆனால் காவல்துறையின் அடக்கு முறையாலும் தமிழ்நாட்டில் ஆண்டு வந்த கட்சிகளின் நெருக்கடிகளாலும் அந்த விழாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டன. ஈழத்தில் மட்டும் இன்றளவும் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு அடுத்த மன்னருக்கு முடி சூட்டு விழா நடத்துவதைப் போல நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் விழாக்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு எடுக்கப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு கபடி போட்டிகள் சைக்கிள் ஓட்டும் போட்டிகள் குதிரை வண்டி பந்தயம் மாட்டு வண்டி பந்தயம் என மிகப் பெரிய விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதேபோல் 27 ஆம் தேதி உள்ள 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் நிகழ்வுகளும் உள்ளூர் அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப் படுகின்றன. நவம்பர் 27ஆம் தேதி பிறந்தவர்கள் தங்களது பிறந்த நாளை கொண்டாடக்கூடாது என்பது அல்ல. ஒவ்வொருவரும் கொண்டாடலாம். உதயநிதிக்கு அன்று பிறந்தநாள் என்பது கொண்டாடக்கூடாது என்று சொல்லவில்லை.
ஆனால் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களுக்கு என்று அவர்களது அடையாளத்தை காட்டும் விதமாக மிகப்பெரிய வீரப்படையை உருவாக்கி ராணுவத்தை உருவாக்கி வான்படையையும் உருவாக்கி மிகப்பெரிய போர் தந்திரங்கள் எல்லாம் கடைப்பிடித்து பல போர்களை முறியடித்த தமிழர்களின் வீரத்தையும் சிறப்புகளையும் மறக்கடிக்கும் விதமாக ஈழ உணவுகளை மட்டுமல்லாது தமிழ் உணர்வுகளையும் மழுங்கடிக்கச் செய்யும் விதமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைமை தங்களது குடும்பத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை குடை பிடிக்க வைப்பதற்காகவும் சேவகம் செய்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறது. அவர்களது தமிழ் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. இதை திமுக தலைமை நவம்பர் 27 என்ற மாவீரர் தின நாளை மறைத்து உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் என்பதை முன்னிலைப்படுத்தி தமிழர்களின் வீரம் திறமை தன்மானம் உள்ளிட்ட அனைத்தையும் மறக்க செய்து வருகிறது. இதை இந்த இளைஞர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றார் காரசாரமாக.








