ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி காலமானார். இதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக திருமகன் ஈவேராவின் தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் துரதிஷ்டவசமாக சமீபத்தில் அவரும் காலமானார். இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக அறிவித்து இடைத் தேர்தலை நடத்தும்படி தமிழக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. இதையடுத்து விரைவில் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறை ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்திலும் ஈரோடு நிர்வாகிகள் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவே நேரடியாக வேட்பாளரை நிறுத்தி மீண்டும் வெற்றி பெற்று காட்டினால், அது வரவிருக்கும் 2026 தேர்தலுக்கு பக்க பலமாக இருக்கும் என்று அக்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவிடம் திமுக மக்களவைக் குழுத்தலைவரும், அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு பேச உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியினர் அகில இந்திய தலைமைக்கு கடிதம் எழுதவுள்ளதாக கூறப்படுகிறது.