தி.மு.க. முப்பெரும் விழா விருதுநகரில் இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவிற்காக விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணாநகரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கலைஞர் திடலில் மாலை 4 மணியளவில் தி.மு.க. முப்பெரும் விழா தொடங்குகிறது. தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்று பேசுகிறார். தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கி பேருரையாற்றுகிறார்.
தி.மு.க. முப்பெரும் விழாவில் தொண்டர்கள் கலைஞர் எழுதிய 4,041 கடிதங்கள், 21 ஆயிரத்து 510 பக்கங்கள் கொண்ட 54 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த விழாவில் முதலமைச்சரின் எண்ணம் கொண்ட 148 பக்க திராவிட மாடல் புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தை துரைமுருகன் வெளியிட, டி.ஆர்.பாலு பெற்றுக் கொள்கிறார். முப்பெரும் விழா முடிவில் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறுகிறார்.
முப்பெரும் விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருதுநகரில் திரண்டுள்ளனர். விழா ஏற்பாடுகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகையால் விருதுநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
விருதுநகரில் இன்று மாலை தி.மு.க. முப்பெரும் விழா
