• Wed. Nov 4th, 2026

தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரனுடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

ByAjmalkhan saleemraja

Nov 4, 2026

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர நகர்மன்றக் கூட்டத்தில், தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரனுக்கும், நகர்மன்றத் தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தேனி அல்லிநகரம் நகராட்சியின் மாதாந்திர நகர்மன்றக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் ரேணுகா பிரியா பாலமுருகன் மற்றும் துணைத் தலைவர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிலையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

கூட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய எம்.எல்.ஏ சபரி ஐங்கரன், கடந்த ஐந்து ஆண்டுகளாக தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் நகராட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், இது நகர்மன்றத்திற்கான கூட்டம் என்றும், இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு எம்.எல்.ஏவுக்கு உரிமை இல்லை என்றும் துணைத் தலைவர் செல்வம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களுக்கும், நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து ஏற்பட்ட கருத்து மோதலை அடுத்து, எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

இதனால் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர நகர்மன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.