உட்கட்சி பூசல் என்பது நமது ஊருக்கு புதிது அல்ல. சில சமயங்களில் பூகம்பம் போல் வெடித்து சிதறும் அல்லது அப்படியே காணாமல் போய்விடும்

கலைஞர் எம்.ஜி.ஆர் இடையே ஏற்பட்ட பூசல் தான் திமுக.. அதிமுக…
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பு அதிமுகவில் பல்வேறு குளறுபடிகள். ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே அன்று ஆரம்பித்த குழப்பங்கள் அவ்வப்போது அமைதியாகவும், சில சமயங்களில் விஸ்வரூபம் எடுத்து வருவதையும் நாம் பார்த்துதான் வருகிறோம். சசிகலாவுடன் ஏற்பட்ட உரசல் தான் அமமுக உருவாக காரணமும்.

தமிழகத்தில் மட்டுமில்லை தேசிய அரசியலில் வி.பி சிங், ஐ.கே குஜ்ரால் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் உட்கட்சி பூசலால் கவிழ்ந்த ஆட்சிகள் கொஞ்சம் நஞ்சமில்லை. இத்தகைய கருத்து மாறுபாடுகள் தமிழக அரசை நோக்கி வருவதாக ஒரு செய்தி.
சமீப காலமாக துரைமுருகன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். காரணம் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் பொதுப்பணித்துறை தமக்குதான் என இருந்த அவருக்கு நீர்வளத் துறையை மட்டும் தரபப்பட்டதும்,
தனது மகனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்தை, தர்மபுரி மாவட்ட இணைப் பொறுப்பாளராக அறிவிக்கும்படி துரைமுருகன் விடுத்த வேண்டுகோளையும் தலைமை கண்டுகொள்ளவில்லை, கட்சியின் முக்கிய முடிவுகளை ஸ்டாலின் தாமாகவே எடுப்பது போன்ற காரணங்களால் ஸ்டாலின் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் துரைமுருகன், தனது சீற்றத்தை வழக்கம்போல வெளிப்படையாக முன்வைத்தும் வருகிறாராம்.

பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் என அமர்க்களப்படுத்தும் நேரு, ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களில் ஒருவர். ஆனால் இது வெளியில் இருந்து பார்க்க மட்டும்தானாம், உள்ளுக்குள் ஒரே புகைச்சலாம். சமீபத்திய மழை வெள்ளத்தின்போது இவர் களத்திற்கு செல்லத் தயங்கியதை அறிந்த ஸ்டாலின், “ஆபிசில் உட்கார்ந்துகொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் நேரமா இது?’’ என சீறியதால் அடித்துப் பிடித்துக்கொண்டு ஸ்டாலினுடன் இணைந்தார். இதுபோக உயர் அதிகாரிகளை கூட ‘வா..,போ’ என சகட்டுமேனிக்கு ஒருமையில் அழைப்பதையும் ஸ்டாலின் ரசிக்கவில்லையாம். இதனால் அவர் அப்செட் ஆனதாகவும் தகவல் உண்டு.
இவர்கள் தவிர, கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி, வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதன், மீனவர் நலத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் பொது வெளியில் அதிருப்தியை வெளிக்காட்டி வருகின்றனர்.

பல்வேறு இன்னல்கள், விமர்சனங்கள், கேலி கிண்டல் என அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த பரிசாக முதல்வர் பதவி இப்போதுதான் ஸ்டாலினிடம் வந்திருக்கிறது. எனவே ஆட்சியை தொடர வேண்டும் என்கிற எண்ணத்தில், முடிந்தவரை கெட்ட பெயர் இல்லாமல் நல்லாட்சியை வழங்க ஸ்டாலின் விரும்புகிறார். ஆனால் மூத்த அமைச்சர்களின் செயல்பாடுகள் இதற்கு நேரெதிராக இருக்கின்றன. இது தமிழக அமைச்சரவைக்குள் கருத்து வேறுபாடுகளை உருவாக்கி வருகிறது. இதை முதல்வர் ஸ்டாலின் எப்படி கையாள போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.