தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் திமுக அரசை கவிழ்க்க பா.ஜ.க.சதி செய்கிறது என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி., சனாதனம் குறித்து பேசியதை இந்து மதத்தை பற்றி இழிவாக பேசியதாக கூறி தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. 6-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதனம் பற்றி உள்ளது. அதில், மேல் ஜாதி, கீழ்ஜாதி என்று புகைப்படத்தோடு விளக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதைநீக்கவில்லை என்றால் அந்த பாடத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி எரிக்க வேண்டிய நிலை வரும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அதை பயன்படுத்தி தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கவும் பா.ஜனதா சதி செய்கிறது. கோவை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் காலம் தாழ்த்தாமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தியை சுட்டுக்கொன்ற அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அக்டோபர் 2-ந் தேதி பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது கவலை அளிக்கிறது. . இவ்வாறு அவர் கூறினார்.