• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டிச.27ல் பக்தர்களுக்கு திருவண்ணாமலை தீப மை பிரசாதம் விநியோகம்..!

Byவிஷா

Dec 8, 2023

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வருகிற டிசம்பர் 27ஆம் தேதி பக்தர்களுக்கு தீப மை பிரசாதமாக வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் உள்ள திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. தினமும் காலை மற்றும் இரவில், சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது.
கடந்த 26-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மாலை 6 மணியளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்குக் காட்சி அளித்தது. கடந்த 6-ஆம் தேதி மலை உச்சியில் காட்சி தரும் மகாதீபத் தரிசனம் நிறைவு பெற்றது.
இதைத்தொடர்ந்து, 7-ஆம் தேதி காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரையை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்குக் கொண்டு வந்தனர். பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி, தீபக் கொப்பரைக்கு பூஜை செய்தனர். இதன் பின்னர், மகா தீப கொப்பரையிலிருந்து தீப மை பிரசாதம் சேகரிக்கப்பட்டு, வருகிற 27-ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று, சிவகாமி சமேத நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டு, பின் பக்தர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.