அரண்மனை-3’ படத்துக்கு பிறகு இயக்குநர் சுந்தர்.சி தற்போது ‘தலைநகரம்-2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வி.இசட்.துரை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சுந்தர்.சி தான் அடுத்ததாக இயக்கும் படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார்.
இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மூவரும் நாயகர்களாக நடிக்கவுள்ளனர். கதாநாயகிகளாக மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, அம்ரிதா ஐயர் மூவரும் நடிக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு , கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சுந்தர்.சி இயக்கிய ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘ரிஷி’, ‘வின்னர்’ போன்ற படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜீவாவும், ஜெய்யும் ஏற்கனவே சுந்தர்.சியின் இயக்கத்தில் ‘கலகலப்பு-2’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ‘நண்பன்’ படத்தில் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் இணைந்து நடித்திருந்தனர். ஊட்டி மற்றும் சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.