தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட இது ஒரு மினி சட்டமன்ற தேர்தலுக்கு ஒப்பானது இதன்படி, வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. மார்ச் 4-ம் தேதி மாநகராட்சிகளுக்கான மேயர், நகராட்சி சேர்மன் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கடந்த ஜனவரி 27-ம் தேதி தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையேற்ற முதல்வர் ஸ்டாலின், கழக நிர்வாகிகளை வெளுத்து வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.இதுகுறித்து தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலர் கூறியதாவது ` இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் அதிக நேரம் பேசினார். 'கோயம்புத்தூர், திருப்பூர், சேலம்... இந்த மூன்று மாநகராட்சியும் நமக்கு பலவீனமாக இருக்குனு உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்காங்க. உண்மையிலேயே அங்க நிலவரம் என்ன?' என்று முதல்வர் கேட்டபோதே, மேற்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள் பலருக்கும் உதறல் எடுத்துவிட்டது. 'அப்படியெல்லாம் நம்ம வீக்காக இல்லைங்க தலைவரே. மக்களுக்கு நம்ம மேல நல்ல அபிப்ராயம் இருக்கு. அதனால, கொங்கு ஏரியா மாநகராட்சிகள் அனைத்தையும் நாம தான் பிடிக்கப் போறோம்' என்று சில மாவட்டச் செயலாளர்கள் அடுத்தடுத்து உத்தரவாதம் அளித்தனர். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்ட ஸ்டாலின்,
இதையேத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் சொன்னீங்க. ஆனா, கோயம்புத்தூர் மாவட்டத்துல ஒரு தொகுதியில கூட தி.மு.க ஜெயிக்கல. கொங்கு ஏரியாவையே அ.தி.மு.க துடைச்சு எடுத்துட்டு போய்டுச்சு’ என்று வெளுத்து வாங்கினார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் கொங்கு மண்டல மாவட்டச் செயலாளர்கள் தடுமாறினார்கள். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ‘பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்துல தவறு நடந்திருக்கிறதாகவும், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் நிதியுதவி வழங்க நாம தவறிட்டதாகவும் அ.தி.மு.க-காரங்க பிரசாரம் செய்றாங்க. இந்த உள்ளாட்சித் தேர்தல்ல அதைத்தான் வீதி வீதியா பேசப் போறாங்க. அதை முறியடிக்குற அளவுல நம்ம பிரசாரம் இருக்கனும். நம்ம ஆட்சி மேல மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்ல. அதை காப்பாத்திக்குற மாதிரி, இந்த உள்ளாட்சித் தேர்தல்ல 21 மாநகராட்சியையும் தி.மு.க கைப்பற்றியாக வேண்டும்அதிகாரமிருக்குங்கற தைரியத்துல அசால்ட்டா இருந்துடாதீங்க. வார்டு கவுன்சிலர் சீட் கிடைக்காதவர்களை அழைத்துப் பேசி, கட்சி வேலையைப் பார்க்கச் சொல்லுங்க. எதிர்கட்சியாக இருந்தப்பவே நாம 50 சதவிகித ஊரகப் பகுதி ஊராட்சிப் பதவிகளைப் பிடிச்சோம். இப்ப நாம ஆளுங்கட்சி. நம்ம ஆட்சி இன்னும் நாலு வருஷத்துக்கு மேல இருக்கு. அதை மனசுல வச்சுகிட்டு வேலைப் பார்க்கணும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்ல நமக்கு எந்த ஏரியாவுல பின்னடைவு வந்தாலும் சரி, அந்த ஏரியாவுக்கு பொறுப்பான மாவட்டச் செயலாளர் மேல கடும் நடவடிக்கை இருக்கும். குறிப்பா, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் மாநகராட்சிகளை தி.மு.க பிடிச்சுடுச்சுங்கற மகிழ்ச்சியான செய்தி எனக்கு வந்தாகணும்’ என்று கண்டிப்பான குரலில் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை செயல்படுத்துவதில், கொங்கு ஏரியா மாவட்டச் செயலாளர்களுக்குத்தான் சில இடர்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது.
கோவை மாவட்டத்திற்குள் கரூரிலிருந்து ஆட்களை அழைத்துவந்து கட்சிப் பணிகளை மேற்பார்வையிட சொல்லியிருக்கிறார் கொங்கு மண்டலத்திற்கு பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜி. இது, லோக்கலிலுள்ள தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நம்ம ஏரியாவுல வந்து அவங்க நாட்டாமை பண்றதா?’ என பொருமுகிறார்கள். கவுன்சிலர் சீட் எதிர்பார்ப்பவர்களிடம் வசூல் வேட்டையும் நடக்கிறது. நாமக்கல்மாவட்டத்தில் கவுன்சிலர் சீட்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வசூலித்திருக்கிறார் மாவட்ட பிரமுகர் ஒருவர்.
ஏற்கெனவே, கீழ்மட்ட கட்சி நிர்வாகிகளிடம் பணப்புழக்கம் எதுவுமில்லை. இந்தச் சூழலில், சீட்டுக்கு நோட்டு எதிர்பார்ப்பது கட்சிக்குள் பொருமலை ஏற்படுத்தி இருக்கிறதுமூன்று மாவட்டங்களில் தி.மு.க பின்னடைவாக இருப்பதாக உளவுத்துறை மூலமாக அறிந்திருக்கும் முதல்வர், கட்சி நிர்வாகிகள் படும் சிரமத்தையும் உளவுத்துறை மூலமாக ஆய்ந்தறிய வேண்டும் என்கின்றனர்.
தி.மு.க கூட்டணியிலுள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு வார்டு கவுன்சிலர் சீட்டுகளை மட்டும் ஒதுக்க அறிவாலயம் முடிவெடுத்திருக்கிறது. அந்தந்த கட்சித் தலைவர்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில், ‘மேயர் பதவிகள் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். முதல்ல வார்டு கவுன்சிலராக ஜெயிச்சு வாங்க. பிறகு பேசிக்கலாமஎன்று கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவுரை வழங்குகிறதாம் திமுக தலைமைஜனவரி 31-ம் தேதிக்குள் வேட்பாளர்களை இறுதி செய்து பட்டியலை அறிவிக்க தீவிரமாகியிருக்கிறது தி.மு.க தலைமை. கட்சியின் மகளிரணிக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு எந்த அவப்பெயரும் இல்லை என்பதை நிறுவிட முயற்சிக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது முயற்சி வெற்றிப் பெறுவது கட்சி நிர்வாகிகளின் செயல்பாட்டில்தான் இருக்கிறது.