• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீமதி மரணம் நீதி கேட்டு டிஜிபி
அலுவலகம் முன்பு சாலைமறியல்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட முயன்றனர். மேலும் பலர் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். போலீசாரின் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்ற மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலக முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட மாதர் சங்க நிர்வாகிகளை கைது செய்த காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி மாணவி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு இன்றைய (நவ.24) தினம் டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டத்தை மாதர் சங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் வீட்டுக்கு நேற்று (நவ.23) நள்ளிரவு சென்று போராட்டத்தில் பங்கேற்க கூடாது என காவல்துறை மிரட்டியிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் மோகனாவை இன்று காலை வீட்டில் இருந்து கிளம்பும்போது வீட்டு வாசலில் வைத்து கைது செய்துவிட்டது. கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சென்னையில் எங்கே இருக்கிறார் என சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து செய்யப்பட்டு இருந்த வாகன ஏற்பாடுகளை எல்லாம் வாகன உரிமையாளர்களை மிரட்டி ரத்து செய்ய வைத்துவிட்டனர். சரி ரயிலில் கிளம்பலாம் என சிதம்பரத்தில் மாதர் சங்க உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் ரயில் நிலையம் சென்றபோது அவர்களோடு தகராறு செய்து ரயில் ஏறவிடாமல் காவல்துறை தடுத்துவிட்டது. ஒரு போராட்டம் நடத்துவதால் என்ன குடி முழுகி போகும்? காவல்துறையின் இத்தகைய மோசமான நடவடிக்கைகள், கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் மேலும் மேலும் சந்தேகங்களை எழுப்புகின்றன. யாரையும் வரவிடாமல் தடுத்தாலும், சொன்னபடி போராட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.