ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தூக்கு கயிற்றுடன் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யக்கோரியும், அதற்கு ஒப்புதல் வழங்காத கவர்னரை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ரத்து செய்யக்கோரியும், கவர்னரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவர், ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதை சுட்டி காட்டும் வகையில் தனது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டு நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.