• Fri. Nov 8th, 2024

காற்று மாசினால் திணறும் டெல்லி

Byவிஷா

Oct 28, 2024

தலைநகர் டெல்லி இந்தியாவிலேயே மிக மோசமான காற்றுமாசு கொண்ட நகரமாக அறியப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகவே டெல்லிக்கு காற்று மாசு பெரும் சவாலாக இருக்கிறது.
இந்நிலையில், தீபாவளி வாரம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்றும் (அக்.28) மிக மோசமாக உள்ளது. கடந்த 24 மணி நேர சராசரியின்படி இன்று காலை 6 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 264 என்றளவில் இருந்தது. இது முந்தைய பதிவோடு ஒப்பிடுகையில் 90 புள்ளிகள் குறைவுதான் என்றாலும் கூட இன்றும் மிக மோசமான தரம் என்றளவிலேயே இருக்கிறது.
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 1, 2025 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பனி காலத்தில் காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி வாழ் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் டெல்லியில் காற்று மாசு அதிகமாகவே உள்ளது. இந்தச் சூழலில் தீபாவளி வாரத்தில் தடையை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் காற்று மாசு இன்னும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்காக, டெல்லிக்குள் பட்டாசுகளை கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளிலேயே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று காற்றின் தரம் 264 ஆக பதிவாகியுள்ளது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. காற்று மாசு அதிகரிப்பால், தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
காற்றில் உள்ள மாசை அளவிட காற்று தரக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. 201 முதல் 300 அளவுக்கு சென்றால், காற்றில் மாசு அதிகம். 301 முதல் 400 வரை மிக அதிகம். 401 முதல் 500 ஏக்யூஐ என்பது மிகவும் மோசமான காற்று மாசு என்று அளவிடப்படுகிறது.
தீபாவளிக்கு பிறகு, மாசு அளவு இன்னும் அதிகரிக்கும். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *