• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தமிழ் நாட்டில் 33 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு

ஜனவரி 3, 2022 ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதுபோன்று முன்னெச்சரிக்கை டோஸ் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் போடப்படும் என்றும் தெரிவித்தார்.


தமிழகத்தைப் பொறுத்தவரை வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று 16ஆவது முகாம் நடைபெற்றது.சென்னை அடையாறு பகுதியில் நடைபெற்ற முகாமில் ஆய்வு மேற்கொண்டபின்செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 33.20 லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதியே தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


பள்ளிகளுக்கே சென்றும், தடுப்பூசிமுகாம்கள் மூலம் சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும். கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்பதால் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தற்போது 29 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இதில் ஜனவரி 3ஆம் தேதிக்குள் 7 முதல் 8 லட்சம் டோஸ்கள் போட்டு முடிக்கப்படும் 22 லட்சம் டோஸ்தான் மீதமிருக்கும்.அதன்படி 33 லட்சம் சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதால், கூடுதலாக 10 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி தேவைப்படும்.

இதை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். முழுவீச்சில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும்.தமிழகத்தில் 8.14 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதல் தவணை 84.87 சதவிகிதப் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 55.85 சதவிகிதப் பேரும் செலுத்தியுள்ளனர். 95 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்கள் விரைவில் செலுத்திக்கொள்ள வேண்டும்.


நாட்டிலேயே கர்ப்பிணிகளுக்குத் தமிழகத்தில்தான் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முதல் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. மொத்தம் 6,18,700 கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.