திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான சாய ஆலை நிறுவனத்தில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிவறையின் செப்டிக் டேங்க் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கியதில் சரவணன், வேணுகோபால், ஹரி கிருஷ்ணன் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

மேலும் லாரி டிரைவர் சின்னசாமி உள்ளிட்ட இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் ஆலை உரிமையாளர் நவீன், பொது மேலாளர் தனபால், சூப்பர்வைசர் அரவிந்தன், விஷவாயு தாக்கி சிகிச்சை பெற்று வரும் லாரி ஓட்டுநர் சின்னசாமி உள்ளிட்ட 4 பேர் மீது கவனக்குறைவாக இருந்து உயிரிழப்பை ஏற்படுத்துதல், மனித கழிவுகளை மனிதர்களை வைத்தே அகற்றுதல், மனித கழிவுகளை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை வைத்து அள்ளியதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆலை மேலாளர் தனபால், சூபர்வைசர் அரவிந்தன் ஆகியோரை கைது செய்துள்ளனர் .
மேலும் சாய ஆலை தரப்பினர் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலையை மாவட்ட நிர்வாகம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சாய ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தரும் அறிக்கை வாயிலாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








