• Fri. Jan 24th, 2025

மின் வயர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

ByKalamegam Viswanathan

Dec 4, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மாடிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சோழவந்தான் மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக ஆபத்தான நிலையில் செல்லும் மின் வயர்களை அகற்றி பாதுகாப்பான வழியில் செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக மின்வாரிய அலுவலகம் அருகில் சப்பாணி கோவில் தெரு பகுதியில் பல்வேறு இடங்களில் வீட்டு மாடியில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் வீட்டு மாடிக்கு செல்லும் உரிமையாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் மின்வயர்களை எதிர்பாராமல் தொடும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

இது குறித்து சோழவந்தான் மின்வாரிய அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் நேரில் சென்று கூறியும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும் விபத்து ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.