மர்ம முடிச்சுகள் நிறைந்த த்ரில்லர்படங்களில் யார் ஹீரோ என்று பார்ப்பதை விட, யார் குற்றவாளி என கதைக்குள் ஒரு கேள்வி இருந்தாலே போதும் அந்தப் படத்தை ரசிகர்களிடம் ஓரளவிற்காவது கொண்டு போய் சேர்த்துவிடலாம்.
இந்தப் படத்தில் வளர்ந்து வரும் கதாநாயகனாக பிரஜின் நடித்திருந்தாலும் படத்தில் உள்ள சஸ்பென்ஸ் இப்படத்தை ரசிக்கக் காரணமாக அமைகிறது.இயக்குனர் பாலாஜி ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லரை பரபரப்பாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.பணி மாறுதல் காரணமாக குற்றாலத்தில் டி 3 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்கிறார் பிரஜின். விபத்தில் பெண் ஒருவர் இறந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.அதன் தொடர்ச்சியாக பல விபத்துகள் நடந்த விவரம் தெரிய வருகிறது. அந்த விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் போது தனது மனைவியையும் அது போன்ற விபத்தில் பறி கொடுக்கிறார்.எப்படியாவது அந்த விபத்துக்களுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என தீவிரமாக முயற்சிக்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
முழு படமும் பிரஜின் மற்றும் அவரது விசாரணையைச் சுற்றியே நகர்கிறது. க்ரைம் திரில்லர் என்றாலே அடுத்து என்ன என்ற பரபரப்பு இருக்க வேண்டும்.அது இந்தப் படத்தில் குறிப்பிடும்படியாகவே இருக்கிறது. எத்தனையோ மெடிக்கல் க்ரைம் திரில்லர் படங்கள் இதற்கு முன்பு வந்திருக்கின்றன. இந்தப் படத்தில் மற்றுமொரு விதமான மெடிக்கல் க்ரைம் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் பொருத்தமாகவே நடித்திருக்கிறார் பிரஜின். பொறுப்பான காவல் துறை அதிகாரி வேடம். போலீஸ் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ஹீரோக்களுக்குக் குறிப்பிடத்தக்க திருப்புமுனையை ஏற்படுத்தித் தரும். இந்தப் படம் பிரஜினுக்கு அப்படி அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பிரஜின் மனைவியாக வித்யா பிரதீப், சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். மெடிக்கல் க்ரைம் என்றாலே அதில் டாக்டர்கள்தான் வில்லன்களாக இருப்பார்கள். இந்தப் படத்திலும் அப்படி ஒரு டாக்டராக ராகுல் மாதவ். ஆரம்பம் முதல் அப்பாவியான டாக்டர் போல வந்து இவரா அப்படி செய்பவர் என அதிர்ச்சியடைய வைக்கிறார்.சிறிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்காது. இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் ரசிக்கலாம்.எதிர்பார்ப்பு இல்லாமல் சென்று பார்த்தால் ஏமாற்றம் தராத படம்