• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிலிப்பைன்ஸில் கோரதாண்டவமாடிய டிராமி புயல்

Byவிஷா

Oct 26, 2024

பிலிப்பைன்ஸில் டிராமி புயலின் கோரதாண்டவத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20க்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் வடமேற்கு பகுதியான படாங்காஸ் மாகாணத்தை, டிராமி புயல் சமீபத்தில் தாக்கியது. டிராமி புயல் கடுமையாக தாக்கியதன் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்ததுடன், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், குடியிருப்புப் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதேபோல் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கனமழையைத் தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, பலர் நிலத்திற்கு அடியில் புதைந்ததாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி, 82 பேர் இறந்ததாக படாங்காஸ் மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, தலிசே நகரைச் சேர்ந்த 20 பேர் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நாட்டின் சில பகுதியில் புயலுடன் கூடிய வானிலை இன்னும் நீடித்து வருவதால், நிவாரண பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் புயலால், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில், 75,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.