• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில்
ஆருத்ரா தரிசன திருவிழா தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதில் மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி நடராஜர் கோவிலில் இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ம் தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகளின் தேர்கள் வீதிகளில் வலம் வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவ சிவா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.