திருச்சியில் 12ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து தனியார் பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 1ம்தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே அரியலூர், நாமக்கல் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டநிலையில் தற்போது திருச்சியிலும் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள அமிர்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம்வகுப்பு பயிலும் மாணவிக்கு, செப்டம்பர் 1ம் தேதி அன்று காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து மாணவியை வீட்டிற்கு அனுப்பியதோடு, மாணவிக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். அதில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பள்ளிக்கு ஒருவாரகாலம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சக வகுப்பு மாணவிகளையும் பரிசோதனை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதுடன் ஆன்லைன் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.