• Thu. Apr 25th, 2024

நாட்டின் வளர்ச்சியை கொரோனவால் தடுக்க முடியாது: பிரதமர் மோடி

கொரோனா நம் முன் சவாலாக இருந்தாலும், அதனால், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் முதல் சிறிய விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. இது விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 9 தவணைகளில் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1.60 லட்சம் கோடி விவசாயி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 10வது தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சி வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது.


பிரதமர் மோடி நிதியுதவியை விடுவித்தார். 10வது தவணையில் 10 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நிதியுதவி வரவு வைக்கப்பட உள்ளது.நிதியை விடுவித்து பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் உள்கட்டமைப்பில் புதிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு புது பரிமாணம் அளிக்கும் வகையில், சிப் உற்பத்தி மற்றும் செமி கன்டக்டர்கள் உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பருவநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில், வரும் 2070 ம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்தலை நிறுத்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

மின்சார வாகனங்கள் துறையில் இந்தியா தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த ஆண்டு பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ல் இருந்து 21 ஆக அதிகரித்துள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக உள்ளது. அன்னிய முதலீடும் சாதனை படைக்கும் வகையில் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் பழைய சாதனைகளை உடைக்கிறது.

விவசாயம் மற்றும் ஏற்றுமதியில் புதிய முன்னுதாரணம் படைக்கப்பட்டுள்ளது.கடந்த 2021ம் ஆண்டானது கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா வலிமையாக போராடிய ஆண்டாக மட்டுமல்லாமல், சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆண்டாக உள்ளது. பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், நவீன உள்கட்டமைப்பும் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். கோவிட் சவாலாக இருந்தாலும், அதனால், நாட்டின் வளர்ச்சியை தடுக்க முடியாது.

கொரோனாவிற்கு முன்பை காட்டிலும், பல அளவுகளில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.இந்த ஆண்டு நாடு 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அப்போது, புது வேகத்துடன் இன்னும் முன்னேறுவோம் என்ற நாட்டின் தீர்மானத்தின்படி புதிய பயணத்தை துவங்குவோம். கடந்த ஆண்டில் ரூ.70 லட்சம் கோடி அளவுக்கு யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இந்தியாவில் 50 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படும் நிலையில், அதில் 10 ஆயிரம் நிறுவனங்கள் கடந்த 6 ஆண்டுகளில் துவங்கப்பட்டவை. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *