• Mon. Apr 21st, 2025

எம்புரான் திரைப்படத்தில் பெரியார் அணை குறித்து சர்ச்சைக்குரிய காட்சி.

எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியார் அணை குறித்து தவறாகச் சித்தரிக்கும் காட்சிகளை நீக்கக்கோரி பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.

எல்2: எம்புரான் 2025 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திரைப்படமாகும். பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், வெளியான இத்திரைப்படத்தை, ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளனர். இது 2019-ஆம் ஆண்டு வெளிவந்த லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

இப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், அபிமன்யு சிங், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், ஆண்ட்ரியா திவதர், ஜெரோம் பிளின், இந்திரஜித் சுகுமாரன், எரிக் எபோனே, சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்தில் முல்லைப்பெரிாயறு அணை குறித்து தவறாக சித்தரித்திருப்பதாகவும், பிருத்விராஜ் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம் கூறுகையில், கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்ததாக காட்டப்படும் ஒரு மதக் கலவரம்.

அதனால் வன்முறைக்கும், படுகொலைக்கும் ஆளாகும் சிறுபான்மை மக்கள், அதை கொடூரமாக அரங்கேற்றியவர்கள், கேரளத்தில் அரசியல் தலைவர்களாக மாறி நிற்பது, பின்னர் அவர்கள் கேரளாவைக் குறிவைப்பது என கவனமாகவும், நுட்பமாகவும் கதையைத் தொடங்கிய திரைக்கதை ஆசிரியர் முரளி கோபியின் பேனாவை, அவ்வப்போது பிடுங்கிய படத்தின் இயக்குனர் நடிகர் பிருதிவிராஜ், படத்திற்கும் அதன் போக்கிற்கும் தொடர்பே இல்லாமல்,முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை கக்க வேண்டிய தேவை எங்கே வந்தது என்பதுதான் நமது கேள்வி.

நெடும்பள்ளி டேம் என்று மாற்றுப்பெயரிட்டு, முல்லைப் பெரியாறு அணையில் வந்து நிற்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது. படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியார், முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி பேசும் பேச்சு கண்டிக்கத்தக்கது. முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடக்கி இருந்த திருவிதாங்கூர் ராஜா, 999 வருடங்களுக்கு இனாமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்காரன் போய்விட்டானாம், மன்னராட்சியும் போய் விட்டதாம், ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்துநிற்கிறது என்று ஒரு வசனம்.

அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால் தான் சரி என்று ஒரு வசனம்.. கேரளாவில் நடக்கும் ஒரு கேடுகெட்ட அரசியலுக்கு, பலிகடாவாக முல்லைப் பெரியாறு அணையை மாற்றுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று.

பிரித்திவிராஜ் சுகுமாரன் மறுபடியும் மறுபடியும் முல்லைப் பெரியாறு அணை மீது கை வைப்பது தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். போகிற போக்கில் முல்லைப் பெரியாறு அணை மீது கை வைத்து தன்னுடைய இனவெறியை வெளிப்படுத்தி இருப்பது இரு மாநில உறவை கெடுப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை பிரித்துவிராஜ் மறந்துவிடக்கூடாது.

எம்புரான் மலையாள திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணையை குறித்து விஷமத்தனமான கருத்துக்களை வலிய திணித்திருக்கும் இயக்குனர் பிருத்திவிராஜை கண்டித்தும், இனவெறியை தூண்டும் இந்தப் படத்தை தயாரித்த கோகுலம் சிட் பண்ட் உரிமையாளர் கோபாலனை கண்டித்தும், வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு கம்பம் நகரில் உள்ள கோகுலம் சிட்பண்ட் அலுவலகத்தின் முன்பு சங்கத்தின் தலைவர் சு. மனோகரன் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றார்.