கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த பணியாளர்களை நிர்வகிக்க ஸ்மித் என்ற தனியார் நிறுவனம் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளது. கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 3 வரை என 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

புதிதாக ஒப்பந்தம் செய்த ஸ்மித் நிறுவனம் இன்று முதல் தினசரி காலை 7 மணி முதல் முதல் மாலை 4 மணி வரை என்ற சுழற்சி முறையில் 9 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் எட்டு மணி நேரம் மட்டுமே பணி செய்ய முடியும் என கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அதிக பனிச்சுமை கட்டாய விடுமுறை வழங்காதது, ESI – PF நிறுத்தி வைத்தல், சம்பளம் பிடித்தம், மரியாதை இல்லாமல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் காவல்துறையினர் மற்றும் ஸ்மித் நிறுவன மேலாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 8 மணி நேரம் மட்டும் வேலை நேரமாக ஆக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து ஒப்பந்த பணியாளர் சுமதி கூறுகையில்: 10 வருடமாக எங்களது சம்பளத்தில் பிடிக்கப்பட்ட பிஎஃப் பணம் எங்களால் முழுமையாக எடுக்க முடியவில்லை, எவ்வளவு வேலை செய்தாலும் அடிமை மாறி பேசுகின்றனர் தற்பொழுது உள்ள நிறுவனம் 8 மணி நேர வேலையை 9 மணி நேரமாக உயர்த்தி உள்ளனர் அது மட்டுமல்லாமல் மேலும் ஒரு மணி நேரம் வேலை செய்ய சொல்வதாகவும், இதுகுறித்து கேட்டால் மிரட்டுவதாகவும் எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கூறினார்.