• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது..,

BySeenu

Dec 8, 2025

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

CITU உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், OHT கார்ப்பரேட்டர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த மறியல் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர்.

அரசாணை 152, 139, 10 ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும், அனைத்து ஒப்பந்த சுய உதவிக் குழு தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஊதியம் வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையை வாபஸ் பெற வேண்டும், கொசு ஒழிப்பு பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், நகராட்சி பணியாளர்களுக்கு இஎஸ்ஐ பிஎப் முறைப்படுத்த வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் தூய்மை காவலர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த சிஐடியு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

இது குறித்து பேட்டியளித்த, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் ரத்தினகுமார், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்ததை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் தங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு ஆகியவற்றை வழங்குகிறோம் என்று அறிவித்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர், அதேசமயம் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என தெரிவித்தார்.

மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக தலைமை செயலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.