ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தி பகவானுக்கு தாரா பாத்திரத்தின் மூலம் தொடர் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் நந்தியம் பகவானுக்கு அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாரா பாத்திரம் மூலம் தொடர் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. நாட்டில் உள்ள சிவாலயங்களில் அவருக்கு எதிரே வீற்றிருக்கும் நந்தியம் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சிவபெருமானிடம் நாம் சொல்ல வேண்டிய கோரிக்கைகளை நந்தியம்பெருமான் மூலம் கூற, அவரும் சிவனுக்கு எடுத்துரைத்து நாம் குறைகளை நிவர்த்தி செய்வார் என்று ஐதீகம். அந்த வகையில் பிரதோஷ நாட்களில் நந்தியம்பகவான் மனம் குளிர பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும். அதன் மூலம் சிவனும் மனம் குளிர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இதேபோல் தற்போது சித்திரை மாதம் கடும் கோடை நிலவி வருகிறது. அக்னி நட்சத்திரம் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் மூலவருக்கு எதிரே பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் நந்திய பகவான் அக்னி நட்சத்திரத்தில் இருந்து குளிர்ச்சி அடைவதற்காக அவர் தலைக்கு மேல் ஒரு தாரா பாத்திரத்தை நிறுத்தி அதனடியில் ஒரு துவாரம் அமைத்து அதன் மூலம் குளிர்ந்த நீர் நந்திய பகவான் தலையில் 24 மணி நேரமும் இடைவிடாமல் விழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நந்திய பகவான் குளிர்ச்சியடைந்து கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற சிவபெருமானிடம் கூறுவார் எனவும் இதன் மூலம் உலகம் கோடையில் இருந்து காப்பாற்றப்படும் என்பதும் ஐதீகம். இந்த தாரா பாத்திரத்தின் தொடர் அபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் சென்று நந்தியின் பெருமானை வணங்கி பார்த்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சௌ.சக்கரை அம்மாள் கோயில் செயல் அலுவலர் செ. முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் செய்துள்ளனர். மேலும் தாரா பாத்திரத்தின் மூலம் தொடர் அபிஷேகம் நந்திய பெருமானுக்கு நடைபெறுவதற்கான ஐதீகத்தினை பக்தர்களுக்கு கோயில் சிவாச்சாரியார்கள் சிறப்பான முறையில் எடுத்துக் கூறி, வருவது குறிப்பிடத்தக்கது.
