ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 நாட்களில் 7 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பழமையான நகரமான ஈத்கா-வில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரண்டு ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஆண்டில் இதுவரை 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமித் ஷா, அதை ரத்து செய்துவிட்டு அவசரம் அவசரமாக டெல்லி திரும்பி உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஷ் சின்கா இன்று காலை டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து இருப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதற்காக, டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது