

காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதன் காரணமாக ஒக்கனேக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்குவதற்கும் இருந்து வரும் தடை நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் ஏற்கனவே காவிரியில் வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வருகிறது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து கொண்டு வருகிறது.
இதையடுத்து ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் மாலை 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 65 அயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் தங்கள் வேதனையைத் தெரிவித்து வருகின்றனர்.

