மதுரை அருகே செக்காணூரணி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா இணைந்து பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
மதுரை மாவட்டம் செக்காணூரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான் பகுதிகளுக்கு செல்ல முக்கிய பேருந்து நிலையமாக செக்காணூரணி பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.

இப்பேருந்து நிலைய கட்டிடங்கள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்பட்ட சூழலில் புதிய பேருந்து நிலைய கட்டிடம் கட்ட இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் செக்காணூரணி பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட சுமார் 8 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பழைய பேருந்து நிலையம் கடந்த வாரம் இடிக்கப்பட்டது.

புதிய பேருந்து நிலையம் கட்ட இன்று அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பூமி பூஜை செய்து புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.