வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக புதிய கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.11.2021) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கானொலி காட்சி வாயிலாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக ராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் ரூ.6.815 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 21 வர்த்தக கடைகள், சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் கூடம் மற்றும் அலுவலக கட்டடம் ஆகிய கட்டடங்களையும், ராஜசிங்கமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 15 வர்த்தக கடைகள், சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் கூடம் ஆகிய கட்டடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனையடுத்து, ராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி) ஆகியோர் புதிதாக திறந்து வைக்கப்பட்ட வர்த்தக கடைகள் கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
இந்த நிகழ்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.டாம்.பி.சைலஸ், ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.